tiruchengode

Language: English

கோவில் அமைப்பு:

திருச்செங்கோட்டில் அமைந்துள்ள மலை சிவலிங்க தோற்றத்துடனும் வடமேற்க்கில் இருந்து பார்க்கும்போது பசுவின் தோற்றத்துடனும், மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும் போது ஆண் உருவம் படுத்து இருப்பதுபோலவும், தென்மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும்போது பெண் படுத்திருக்கும் தோற்றமும் அமைந்துள்ளது. அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஆதிகேசவபெருமாள் ஆலயம், அருள்மிகு செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகிய மும்மூர்த்திகளின் சன்னதிகளையும் தனிதனியாய் உடைய ஆலயமாகஅமைந்துள்ளது. தென்பகுதியில் கஜமுக பிள்ளையாரும், வடபகுதியில் ஆறுமுக சுவாமி ஆலயமும் அமைந்துள்ள இடத்திலிருந்து மலையின் முதல் படியானது தொடங்குகிறது. இவ்விடத்தினை மலையடிவாரம் என்று அழைக்கின்றனர்.

திருபடிகள் வழியாக சென்றால் முதலில் செங்குந்தர் மண்டபத்தையும் அதனை அடுத்து காளத்திசுவாமிகள் மண்டபம் திருமுடியார் மண்டபம் மற்றும் தைலி மண்டபத்தையையும் அடையலாம். தைலி மண்டபத்தில் மேற்குபுறத்தில் 7 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்ட நந்தி ஒன்று ராஜகோபுரத்தை பார்த்தவண்ணம் உள்ளது. பசுவன் கோவில் என்று அழைக்கப்படும் இதன் பின் உள்ள பகுதியை நாகமலை என்று அழைக்கின்றனர். இவ்விடத்தில் 60 அடி நீளத்தில் ஆதிசேடன் ஐந்து தலைகளுடன் மிக பிரமாண்டமாய் அமைந்துள்ளது. இதனையடுத்து உள்ள சில மண்டபங்களை கடந்து சென்றால் அறுபதாம் படி என்னும் 'சத்தியப்படியினை' அடையலாம். இப்படியின் இறுதியில் முருகப்பெருமான் உள்ளார். வாகனப்பாதை மலையைச் சுற்றிக் கொண்டு, எதிர்ப்பக்கமாகச் செல்கிறது. நடந்து செல்லும் பாதை, மலையுச்சியில் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரத்தில் கொண்டு விடுகிறது. இதுவே, கோயிலின் வடக்கு கோபுரம். வாகனப் பாதையில் வந்தால், கோயிலின் மேற்கு கோபுரத்தை அடைந்து விடலாம். வடக்கு ராஜ கோபுரத்தை அடைந்தால் உயரமாக, அழகாக, நிறைய சுதைச் சிற்பங்களோடு இருக்கிறது கோபுரம். உள்புகுந்தால், கோயில்புறத்தில், 20 படிகள் கீழிறங்க வேண்டும். கீழிறங்கினால், இப்போது நாம் நிற்பது கோயிலின் பிராகாரம். வெளிப்பிராகாரம் என்று சொல்லலாம். இந்தப் பிராகாரத்திலிருந்துதான் சந்நிதிகளுக்கும் சந்நிதி முன்மண்டபங்களுக்கும் செல்ல வேண்டும்.

நாம் இருப்பது வடக்குத் திருச்சுற்று. முதலில், பெரிய ஆதிசேஷன் உருவம். ஐந்து தலைகளுடன் படமெடுத்து நிற்கிறது. அடுத்தது சங்கமேஸ்வரர் சந்நிதி (மேற்குப் பார்த்த மாதிரி). சங்கமேஸ்வரருக்கு வலப் பக்கம், தெற்குப் பார்த்த மாதிரி வேதநாயகி அம்மன். அடுத்து, தெற்கு நோக்கிய காலபைரவர் இருக்கிறார். நான்கு கரங்களும், மந்தகாசப் புன்னகையுமாக வாகனத்தோடு இருக்கும் நின்ற திருக்கோல பைரவர். கிழக்கு வாயிலைக் கடந்து, வலம் தொடர்ந்து, தெற்குச் சுற்றில் திரும்புகிறோம். இந்தச் சுற்றில் பிராகாரம் சரிவாக இறங்குகிறது. சில இடங்களில் பிராகாரம் உயரத்தில் இருக்க, நடுவில் கோயில் மண்டபமும் சந்நிதிகளும் சற்றே பள்ளத்தில் இருப்பதுபோலத் தோற்றம் தருகின்றன. தெற்குச் சுற்றில் சப்தமாதர்கள். அடுத்து வரிசையாக அறுபத்துமூவர். தென்மேற்கு மூலையில் நிருதி விநாயகர். மேற்குத் திருச்சுற்றில் குன்றீசர், பர்வதவர்த்தினி உடனாய ராமநாதசுவாமி, பஞ்சலிங்கங்கள். இப்படியே, மேற்கு கோபுரத்தை அடைந்து விடுகிறோம். வாகனத்தில் வந்தால், உள்ளே வரும் வாயில் இதுதான். மூன்று நிலை கோபுரம். தொடர்ந்து வலம் வருகிறோம். வடக்குச் சுற்றில் திரும்பியவுடன் நாச்சாரம்மன். அடுத்து ஜேஷ்டாதேவி. மண்டபத்தின் பக்கமாக செல்வ விநாயகர். இந்தச் சுற்றில், ஒரு தனிச் சந்நிதியில் மல்லிகார்ச்சுனர்.

இன்னொரு கிழக்குப் பார்த்த தனிச் சந்நிதியில், சகஸ்ர இலிங்கம். சற்றே தள்ளி, பெரிய இலுப்பை மரம். இதுவே, தல மரம். அருகில், காசி விசாலாட்சி. அடுத்திருப்பது, தெற்கு நோக்கிய நடராஜர் சந்நிதி. நடராஜர் சந்நிதியின் அருகில்தான், நாம் உள்ளே நுழைந்த வடக்கு கோபுர வாயில். மேற்கு கோபுரத்தின் வழியாக உள்ளே வந்து, பிராகாரத்தைக் கடந்தால், பெரிய மண்டபம் ஒன்றை அடைந்து விடுவோம். இந்த மண்டபத்தில்தான் அர்த்தநாரீஸ்வரர் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவை உள்ளன. மேற்கு கோபுர வாயிலுக்கு நேராக உள்ள இவற்றுக்கு அப்புறமாக, ஒரு நாலு கால் மண்டபம். அதே நேர்க்கோட்டில், கல்சுவர் ஒன்று. அதில் சாளரம். சாளரம் வழியாகப் பார்த்தால், உள்ளே இருக்கும் மூலவர் தெரிவார்.

இந்த மண்டபத்தின் தெற்குப் பகுதியில் கிழக்குப் பார்த்ததாக ஒரு சந்நிதி. அருள்மிகு நாகேஸ்வரர்; சிவலிங்கத் திருமேனி. அவருக்கு எதிரில் நந்தி. இந்த மண்டபத்திலிருந்து, வடக்குத் திருச்சுற்றை அடைந்து, அங்கிருந்துதான் மூலவர் சந்நிதிக்குச் செல்ல வேண்டும். சொல்லப் போனால், இந்த முன் மண்டபத்துக்கு நேர் பின்னால்தான், செங்கோட்டுவேலர் சந்நிதியும், அர்த்தநாரீஸ்வரர் சந்நிதியும் (சாளரம் வழியாக இவரைப் பார்க்கலாம்) உள்ளன. இருப்பினும், பிராகாரத்துக்குச் சென்று, அங்கிருந்து பக்கவாட்டு வழியாகத்தான் செல்ல வேண்டும். வடக்குத் திருச்சுற்றில் முதலில் பார்த்தோமே, பெரிய ஆதிசேஷன் வடிவம். அதற்கு எதிரில் நுழைகிறோம். இங்கும் ஒரு மண்டபத்தை அடைகிறோம்.

 
 
To Advertise Here
Dial: 96009 28028

கோவை | திருவண்ணாமலை | ஊட்டி | நாமக்கல் | மூன்னார்| கொடைக்கானல் | டாப்ஸ்லிப் | மசனகுடி | ஒக்கேநக்கல் | உடுமலைபேட்டை | பழனி | ஸ்ரீவில்லிபுத்தூர்| வயநாடு | வேலூர் | கூர்க்| வால்பாறை | கோயம்புத்தூர் | கொல்லூர் மூகாம்பிகை கோவில் | மதுரை

Tiruchengode.in is Powered by Cybergeek solutionTM